×

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் இதுவரை 80,000 மாணவர்கள் சேர்ந்தனர்: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் வழக்கத்தைவிட இந்த ஆண்டு முன்னதாகவே தொடங்கப்பட்டு விட்டது. வரும் கல்வியாண்டில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. தொடக்கப் பள்ளிகளில் ‘’ஸ்மார்ட் கிளாஸ் ரூம்’’ கொண்டுவரப்பட இருக்கிறது. இதுதவிர 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு டேப்லெட் வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற வசதிகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வு மேற்கொண்டு மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது.

இதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஒரு பள்ளிக்கு ரூ.2 ஆயிரம் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 5 நாட்களில் மட்டும் அரசு பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக தொடக்கக்கல்வித் துறை ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி தரவுகளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் மொத்தமாக அரசுப் பள்ளிகளில் 80,076 மாணவ-மாணவிகள் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவர்களும், சேலம் மாவட்டத்தில் 7,890 மாணவர்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,770 மாணவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 4,228 மாணவர்களும், திருச்சி மாவட்டத்தில் 3,012 மாணவர்களும், திருப்பூர் மாவட்டத்தில் 2,152 மாணவர்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,953 மாணவர்கள், நாமக்கல் மாவட்டத்தில் 3,801 மாணவர்களும், மதுரையில் 2,482 மாணவர்கள் என சேர்க்கை நடைபெற்றுள்ளது.

மேலும், அங்கன்வாடி மையங்களில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவும், 5 லட்சம் மாணவர் சேர்க்கையை இலக்காக கொண்டு செயல்படவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

The post தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் இதுவரை 80,000 மாணவர்கள் சேர்ந்தனர்: பள்ளிக்கல்வித்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,School Education Department ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கல்வித்துறை திட்டம் குறித்து பீகார் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி